இந்தியா

Oyo, Make my trip-க்கு ₹392 கோடி அபராதம்: இந்திய போட்டி ஆணையம் அதிரடி; ஏன் தெரியுமா?

Oyo, Make my trip-க்கு ₹392 கோடி அபராதம்: இந்திய போட்டி ஆணையம் அதிரடி; ஏன் தெரியுமா?

JananiGovindhan

விதிகளை மீறியும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நியாயமற்ற வணிக நடைமுறைகளை பின்பற்றியதாக மேக் மை ட்ரிப், கோஐபிபோ, ஓயோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் 392 கோடி ரூபாய் அபராதமாக விதித்திருக்கிறது.

அதில் OYO நிறுவனத்துக்கு 168.88 கோடி ரூபாயும், மேக் மை ட்ரிப் மற்றும் கோஐபிபோ-க்கு 223.48 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக 131 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், தங்களது தொழிலை முன்னிலைப்படுத்துவதற்கும் மேற்குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் ஓட்டல் நிர்வாகங்களிடம் தங்களது நிறுவனத்தின் மூலமாக மட்டுமே சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.

மேலும், மேக் மை ட்ரிப், ஓயோ, கோஐபிபோ உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்வோருக்கு தள்ளுபடிகளும் வாரி வழங்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு லாபமாகவும், அந்தந்த இணையதள நிறுவனங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தாலும், மற்ற டூரிஸ்ட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

இதனிடையே அபராதத்துக்கு ஆளான ஓயோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஓட்டல் நிர்வாகங்களிடம் தங்களது இணையதளத்தை தவிர ஓட்டல்கள் அல்லது வேறு இணையதளத்தில் புக் செய்யும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த முறையற்ற ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI - Competition Commission of India) பல்வேறு விசாரணைகளை நடத்தி வந்த நிலையில் தற்போது 392 கோடி ரூபாய் அபராதத்தை மேக் மை ட்ரிப், ஓயோ, கோஐபிபோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதித்திருக்கிறது. இதனிடையே கடந்த 2017ம் ஆண்டுதான் Goibibo நிறுவனத்தை make my trip நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து அதே பெயரில்தான் தற்போது செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.