சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடினான் பாரதி. ஆனால் சமீப காலமாக சாதி ரீதியிலான துன்புறுத்தல்களும், கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக கல்வி நிலையங்களில், மாணவர் விடுதிகளில் சாதி வன்மம் புரையோடிப் போய் உள்ளது.
அலகாபாத்தில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்று வந்தவர் சரோஜ். வயது 26. பைக் வாங்கியதை கொண்டாடும் விதமாக சரோஜ் தனது நண்பர்களுடன் அலகாபாத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். உணவகம் மாடியில் இருந்ததால் படிக்கட்டு வழியாக செல்ல வேண்டி இருந்தது. அப்படி படிக்கட்டில் செல்லும் போது உணவகத்திற்கு வந்திருந்த விஜய் ஷங்கர் சிங் என்பவரின் காலில் தெரியாமல் சரோஜின் கை பட்டுவிட்டது. அவ்வளவுதான் முறைக்க ஆரம்பித்த விஜய், சரோஜை திட்ட, வாய் வார்த்தைகள் கைகலப்புக்குப் போனது.
இந்தச் சண்டையின் போது அங்கிருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதில், உணவகத்தில் பணியாற்றும் நபரின் மேல் பட்டு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சரோஜை கண்மூடித்தனமாக தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடி வந்த சரோஜ், நிலைகுலைந்து கீழே விழ, அவரை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். இரும்புக் கம்பிகள், ஹாக்கி பேட் போன்றவற்றை வைத்து சாகும் அளவுக்கு சரோஜ் மீது கடும் வன்மத்தோடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்தவர்கள் சரோஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரோஜ் உயிரிழந்தார். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்திய போலீசார், உணவகத்தில் சிசிடிவியை கைப்பற்றி பார்த்ததில், கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதல் தெரிய வந்தது. விஜய் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தராத உணவக உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரும் விஜய்யின் நண்பர் என தெரியவந்தது.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சரோஜ் தலித் என்பதால் விஜய் அவர் மீது வன்மம் கொண்டு தாக்கியதாகக் கண்டறிந்தனர்.