இந்தியா

டிச.6 ல் அயோத்தி குறித்த பதிவு.. அர்ஜூன் சம்பத், அவருக்கு பதிலளித்தவர் மீது வழக்குப்பதிவு!

டிச.6 ல் அயோத்தி குறித்த பதிவு.. அர்ஜூன் சம்பத், அவருக்கு பதிலளித்தவர் மீது வழக்குப்பதிவு!

நிவேதா ஜெகராஜா

இந்து மக்கள் கட்சியினரின் புதிய போஸ்டரால், தமிழக முழுவதும் உள்ள பெரியார் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசாரால் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினமான  டிசம்பர் 6 ஆம் தேதி என்பது இந்தியாவில் பதற்றத்துக்குரிய நாளாகவே பார்க்கப்படுகின்றது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்த நாளில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் யாரேனும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் செய்கின்றனரா என்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று டிசம்பர் 6ஆம் தேதி "அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்... இந்துக்களின் வெற்றி திருநாள்... டிசம்பர் 6 ..." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டிருகந்தார். மேலும்,"அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டிட சபதம் ஏற்போம்" என்றும் அவர் பகிர்ந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

அர்ஜுன் சம்பத்தின் இந்த ட்விட் போஸ்டரை சமூகவலைதளங்களில் பகிர்ந்து தடா ரஹீம் என்பவர், "அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள் என்று நீங்கள் போடுவது சரி என்றால், பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச் சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு" என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். இந்த ட்வீட்கள் போலீசார் கவனத்திற்கு வந்த நிலையில், அர்ஜுன் சம்பத் மற்றும் தடா ரஹீம் மீது 153 ஏ மற்றும் 505(2) பிரிவுகளின் கீழ் கோவை பந்தய சாலை காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இதுவொருபுறமிருக்க, இந்து மக்கள் கட்சியின் மற்றுமொரு சமூகவலைதள பதிவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து, குங்குமம் விபூதியிட்டு போஸ்டர் ஒட்டியிருந்தார் அர்ஜூன் சம்பத். அதன்பின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கும் செயலோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைப்பதோ செய்ய மாட்டேன். அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தியப் பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் மணி மண்டபத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகரன் வழக்கை முடித்து வைத்தார். இதன்பின்னர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு காவல்துறை பாதுகாப்புடன் சென்னை பட்டினப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்ந்த நபர்கள் மறியலில் ஈடுபட்டு, தாக்க முற்பட்டனர். இதை கண்டித்து, இந்து மக்கள் கட்சியினர், சென்னை பெருநகர காவல்துறை எல்லை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு காவி துண்டை அணிவிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருந்தனர் இதனையொட்டி பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு  சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு  போடபட்டுள்ளது.