இந்தியா

2 குழந்தைகள் மட்டுமே இருக்கும்படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது : மத்திய அரசு

2 குழந்தைகள் மட்டுமே இருக்கும்படி மக்களை கட்டாயப்படுத்த முடியாது : மத்திய அரசு

Veeramani

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை மட்டுமே கொண்டிருக்குமாறு மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில்,  இந்தியாவில் குடும்ப நலத் திட்டம் தம்பதியினருக்கு எந்தவொரு நிர்ப்பந்தமும் இல்லாமல் தங்கள் குடும்பத்தின் அளவை தீர்மானிக்கும் உரிமையை அளிக்கிறது என்று கூறியுள்ளது. வக்கீல் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் “ நாட்டில் கட்டாயமாக இரண்டு குழந்தை விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது நாட்டில் உள்ள குடும்பங்களின் அளவைக் கட்டுப்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அவரது மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னர், மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்று  உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் “வெடிகுண்டு வெடிப்பை விட மக்கள்தொகை வெடிப்பு மிகவும் ஆபத்தானது. காற்று, குடிநீர், சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான அரசியலமைப்பு உரிமைகளை மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல், கட்டுப்படுத்தமுடியாது” என்று உபாத்யாயா கூறியுள்ளார்.

மக்கள்தொகையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வ அல்லது சட்டவிதி முறைகளை மத்திய அரசால் அறிமுகப்படுத்தவோ ஊக்குவிக்கவோ முடியாது என்று கூறிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், "இந்தியாவில் குடும்ப நலத் திட்டம் தன்னார்வத் தன்மை கொண்டது, இது தம்பதியினருக்கு ஏற்றவாறு, எந்தவொரு கட்டாயமும் இல்லாமல் அவர்களின் குடும்பத்தின் அளவைத் தீர்மானிக்கவும், குடும்பக் கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றவும் உதவுகிறது" என்று அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.