பெட்ரோலுடன் கலக்க பயன்படுத்தப்படும் எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கரும்பிலிருந்து பெறப்படும் எத்தனால் கொள்முதல் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின்படி பெட்ரோலுடன் 10 சதவிகிதம் எத்தனால் கலக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 2019 முதல் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட எத்தனால் கொள்முதல் விலை 2022-23 வருடத்துக்கானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலப்பொருள் அடிப்படையில் எத்தனால் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், விலை உயர்வும் அதே விகிதத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை குழு முடிவுப்படி, இரண்டாம் ரக ஹெவி மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் விலை, லிட்டருக்கு ரூ.46.66ல் இருந்து ரூ.49.41 ஆக உயர்த்தபடுகிறது. அதேபோல் முதல் ரக ஹெவி மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ.59.08ல் இருந்து ரூ.60.73 ஆக உயர்த்தப்பட்டது. கரும்புச் சாறு/சர்க்கரை/சர்க்கரை பாகு மூலம் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் விலை, லிட்டருக்கு ரூ.63.45ல் இருந்து ரூ.65.61 ஆக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுபான ஆலைகள் இத்திட்டத்தின் பலனைப் பெறமுடியும் மற்றும் அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எத்தனாலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பு விவசாயிகளின் முன்கூட்டியே பணம் செலுத்த எத்தனால் சப்ளையர்களுக்கு லாபகரமான விலை உயரும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகள் பலன் அடைவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் எத்தனால் கொள்முதல், 2013-14 எத்தனால் ஆண்டில் 38 கோடி லிட்டரிலிருந்து படிப்படியாக அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு இது 452 கோடி லிட்டராக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எத்தனால் வடித்தல் திறனை ஆண்டுக்கு 923 கோடி லிட்டராக மேம்படுத்துதல் இலக்கு தனியார் நிறுவனங்களால் ரூ.25,000-ரூ.30,000 கோடி முதலீடுகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கணபதி சுப்ரமணியம்