குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தின் போது 8 வயது சிறுவன் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர், கண்டாநகர், ஷமாரூஃப், கூனிப்பூர், இஸ்மெயில் பூர் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. பிஜ்னூர், சம்பல், ஃபிரோஜாபாத், கான்பூர், வாரணாசி, மீரட் ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் அரங்கேறின.
கோரக்பூரில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு வந்திருந்த இஸ்லாமியர்கள், திடீரென பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தபோது மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல மாறியது. புலந்த்சாகரில் நடந்த போராட்டமும் வன்முறையில் முடிந்தது. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்றவற்றால், பதற்றம் சூழ்ந்தது.
முசாஃபர்நகரில் 144 தடை உத்தரவை மீறி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பஹ்ராய்ச் பகுதியில் போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறை, இணையதள சேவைகளை தற்காலிகமாக முடக்கியுள்ளது. கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாரணாசியில் வெடித்த வன்முறையில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பதற்றமான பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.