இடைத் தேர்தல்களில் தோல்வியின் எதிரொலியே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 மற்றும் 10 ரூபாய் வீதம் குறைத்து நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இது குறித்து விமர்சனம் செய்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வளவு நாள் மத்திய அரசின் பேராசையினால் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் அதிக வரி விதிப்பினால் தான் பெட்ரோல் டீசல் அதிக விலைக்கு விற்கப்பட்டது என்பது தற்பொழுது உறுதியாகி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தான் இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனவும் அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மக்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களின் துயரத்தை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைப்பு. நாங்கள் செய்ததை நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதனை நாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்