இந்தியா

மத்திய பட்ஜெட் 2023: வேளாண் Start up-களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடி!

மத்திய பட்ஜெட் 2023: வேளாண் Start up-களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடி!

நிவேதா ஜெகராஜா

பட்ஜெட் குறித்த அறிவிப்பால் சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது. 552 புள்ளிகள் உயர்ந்து, 60,000-ஐ தாண்டி வர்த்தமாகிறது. இந்நிலையில் பட்ஜெட் உரை தொடக்கத்திலேயே `இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும்’ என நிதியமைச்சர் தெரிவித்ததால், எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்தது. இதில் வேளாண் Start-up’களுக்கான கடன் இலக்கு, இனி ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் உரையை வாசித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தன் உரையின் தொடக்கத்தில் அவர், “உலகப்பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா உள்ளது. உலக நாடுகளுக்கு இணையான ஆராய்ச்சிகளில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஏழு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் அமைந்துள்ளன. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம், கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது” என்று பேசினார்.

தொடர்ந்து, வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அவர். அவற்றின் விவரம் பின்வருமாறு:

“பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும். விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அமைக்கப்படும். சிறுதானியங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் உண்டு. மேலும் விவசாய விளைப்பொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும். சிறு குறு விவசாயிகளுக்கான வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் ரூ. 63 கோடி கடன் வழங்க முடிவு.

வேளாண்துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு, ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும். சிறு குறு நிறுவங்களுக்கு தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்”

இவற்றுடன் புதிய விமான நிலையங்கள் அமைப்பது, செவிலிய கல்லூரிகள் அமைப்பது, தோட்டக்கலை வளர்ச்சிக்கான நிதி, கர்மயோகி திட்ட அறிவிப்பு என பலவற்றை அவர் அறிவித்தார்.