இந்தியா

தனி நபர் வருமான வரிக்கு புதிய நடைமுறை - பழைய முறையும் தொடரும் என அறிவிப்பு

தனி நபர் வருமான வரிக்கு புதிய நடைமுறை - பழைய முறையும் தொடரும் என அறிவிப்பு

webteam

2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் புதிய தனிநபர் வருமான வரிவிகிதங்களுக்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய வருமான வரி நடைமுறைபடி, ஆ‌ண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சத்து ஐம்பதாயிரம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வருமான வரி விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12லட்சத்து ஐம்பதாயிரத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கான வரிவிகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

15லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள நபர்கள் 30‌ சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறைவான வரி விகிதங்கள் கொண்ட இந்த நடைமுறையை தேர்வு செய்தால், வருமான வரிச்சலுகையும் கிடைக்காது எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், புதிய நடைமுறை வரி விகிதம் அறிவிக்கப்பட்டாலும், பழைய நடைமுறையும் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு வரி விகித நடைமுறைகளில் எதை வேண்டுமானாலும் வரி செலுத்துவோர் தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.