இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காகவே நாட்டில் பலரும் பொது இடங்களில் ஏதேனும் விதிமீறல்களில் ஈடுபட்டு கொண்டு வருவதும், அதில் சிக்குவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டெல்லி அருகே நெடுஞ்சாலையில் பைக் ஓட்டியபடியே பீர் குடித்துக் கொண்டிருந்த வீடியோ மூலம் இளைஞர் ஒருவர் போலீசிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
காசியாபாத்தில் உள்ள டெல்லி - மீரட் இடையேயான விரைவுச் சாலையில் புல்லட் வண்டியில் ஹாயாக பீர் குடித்தபடி இளைஞர் வண்டி ஓட்ட அவரது சகாக்கள் இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலானது அவர்களுக்கு வினையாக மாறியிருக்கிறது.
அதன்படி, பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர் குமார் என்பதும், அசலட்புர் பகுதியைச் சேர்ந்த அபிஷேஷ் குமார் என்பவரின் பைக்தான் அந்த புல்லட் என்பதையும் போலீசார் கண்டறிந்திருக்கிறார்கள். இதனையடுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்ட முசோரி போலீசார் அவர்கள் மீது மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி அபராதத்தையும் விதித்திருக்கிறார்கள்.
இதனடிப்படையில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்றது, பைக் ஓட்டும் போது பீர் குடித்தது என்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிந்து, 31 ஆயிரம் ரூபாய்க்கான அபராத செலானையும் கொடுத்திருக்கிறார்கள்.