புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள், அங்கே பெய்துவரும் மழையால் கூடாரத்தில் தஞ்சமடைந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு உடன்பட மறுப்பதால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவியது. இதனால், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குளிரில் நடுங்கினர். இந்நிலையில், டெல்லி - ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதிகளில் ஒன்றான சிங்கு பகுதியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.