சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரள பிராமணர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சூழலில் கேரள பிராமணர் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர். மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றம் விடுமுறையிலுள்ள நிலையில் வழக்கு தற்போது விசாரிக்கப்படாது. எனவே அடுத்த வாரமோ அல்லது நவம்பர் இரண்டாம் வாரத்திலோ விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.