varavara rao pt web
இந்தியா

ஹைதராபாத் சென்று சிகிச்சை மேற்கொள்ள வரவரராவிற்கு அனுமதி!

கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவ், கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஒரு வார காலம் ஹைதராபாத் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

PT WEB

கடந்த 1818 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் பேஷ்வா படையினருக்கும் பட்டியல் இன மக்கள் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பட்டியில் இன மக்கள் வெற்றி பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி நிகழ்வை பட்டியல் இன மக்கள் பெரும் விழாவாக கொண்டாடுவதோடு உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் விதத்தில் நினைவுத்தூணுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

varavara rao

அப்படித்தான், இந்நிகழ்வின் 200 வது ஆண்டையொட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ’எல்கர் பரிஷத்’ மாநாடு நடைபெற்றது. பட்டியல் இன மக்களின் எழுச்சியைக் கொண்டாடும் இந்த மாநாட்டில் இந்தியா முழுக்க உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

ஆனால், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 1 ஆம் தேதி இந்நிகழ்வையொட்டி எதிர்பாராவிதமாக பெரிய கலவரம் வெடித்தது. அதில் ’எல்கர் பரிஷத்’ மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி கவிஞர் வரவர ராவ் உட்பட மொத்தம் ஒன்பது சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 9 பேரில் தென்னிந்தியாவைச் சேர்ந்த வரவர ராவ், புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.

மும்பையில் உள்ள தலோஜா சிறையில் இருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாதம் நிபந்தனை ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தனக்கு நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று வரவரராவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மும்பை உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்முடிவில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரவர ராவிற்கு கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஒரு வார காலம் ஹைதராபாத் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.