இந்தியா

புதுச்சேரியில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: என்ஆர் காங்கிரசுக்கு நெருக்கடி தருகிறதா பாஜக?

புதுச்சேரியில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: என்ஆர் காங்கிரசுக்கு நெருக்கடி தருகிறதா பாஜக?

jagadeesh

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்துவரும் சூழலில் புதுச்சேரியில் அரசியல் ஆடுபுலி ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. என்ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சைகளை கூட்டணிக்கட்சியான பாஜக இழுப்பதால் ரங்கசாமி, இன்னும் அமைச்சரவை அமைக்காமல் மவுனம் காத்துவருகிறார். என்ன நடக்கிறது புதுச்சேரியில்?

புதுச்சேரி  சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நீண்ட இழுபறிக்கிடையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ரங்கசாமியை முதல்வராக முன்மொழிந்து கடந்த 7ந்தேதி அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் பாஜகவிற்கு துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என பதவி ஏற்பு விழாவிற்கு வந்த மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்திருந்தார்.

ஆனால் இது பற்றி ரங்கசாமி எதுவும் பதில் கூறாத நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இந்த சந்தர்ப்பத்தில் பாஜகவைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு நியமன எம்எல்ஏ பதவி வழங்கியது. இந்நிலையில் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை தோற்கடித்த சுயேச்சை எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாசனை பாஜக தனது ஆதரவாளராக சேர்த்துக்கொண்டுள்ளது. மேலும் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோரையும் அடுத்தடுத்து பாஜகவில் இணைத்து தனது பலத்தை 12 ஆக உயர்த்திக்கொண்ட பாஜக, 12 எம்.எல்.ஏக்களை கூட்டி ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபட்டது.

இது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆட்சிக்கு தாங்கள் எந்த நெருக்கடியையும் தரவில்லை என்கிறார் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா. எந்த முடிவையும் முற்றுப்புள்ளியையும் வைக்கும் இடத்தில் ரங்கசாமி இருக்கின்றார். ரங்கசாமி எடுக்கும் முடிவு பாஜகவிற்கு எதிராக இருந்தால் அதை எதிர்கொள்ள பாஜகவும் தயாராகிவிட்டது, பாஜக எதிர்த்தால் அதை எதிர்கொள்ள வியூகங்கள் அமைக்க என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது.

இந்த ஆடுபுலி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மாநிலத்தையும் பொருளாதாரத்தை காப்பாற்றுங்கள் என்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.