ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கட்டாயம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது பயணத்தை ஒத்திவையுங்கள் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். அதில் நடைப்பயணத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், முகக்கவசம், சுத்திகரிப்பான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், பொது சுகாதார அவசர நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றவும் தேசிய நலன் கருதி இந்திய ஒற்றுமைப் பயணத்தை ஒத்திவைக்குமாறும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தரப்பு கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளது.
குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றினாரா? என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் கேள்வி எழுப்பி உள்ளார். ராகுலின் நடைப்பயணம் வெற்றி அடைந்துள்ளதால் மக்களை திசை திருப்ப மத்திய அரசு முயல்வதாக சௌத்ரி சாடியுள்ளார். இதேபோல் பாஜகவின் கவலை கோவிட் பற்றியானது அல்ல என்றும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள் எனவும் இமாச்சல் பிரதேச எம்.எல்.ஏவும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குல்தீப் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.