இந்தியா

கடந்த நிதியாண்டில் பாஜகவிற்கு குவிந்த 400 கோடி நன்கொடை

கடந்த நிதியாண்டில் பாஜகவிற்கு குவிந்த 400 கோடி நன்கொடை

Rasus

2017-2018-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 93 சதவீதம் பாரதிய ஜனதா கட்சியே பெற்றது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இரண்டு முக்கிய பிரதான தேசிய கட்சிகளாக காங்கிரஸ், பாஜக உள்ளன. இது தவிரவும் தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட சில தேசிய கட்சிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 93 சதவீதம் பாரதிய ஜனதா கட்சியே பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கடந்த 2017-18-ஆம் ஆண்டு நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக 469.89 கோடி நன்கொடைகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக பாஜகதான் அதிக நன்கொடையை பெற்றுள்ளது.

அதாவது பாஜக கடந்த நிதியாண்டில் மொத்தமாக பெற்ற நன்கொடை ரூ.437.04 கோடி ஆகும். இது கட்சிகளின் மொத்த நன்கொடையில் 93 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி ரூ.26.658 கோடியையும், தேசியவாத காங்கிரஸ் ரூ.2.087 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.2.756 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் ரூ.1.146 கோடி, திரிணாமூல் காங்கிரஸ் 0.26 கோடி தொகையையும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி எந்தவொரு நன்கொடையும் பெறவில்லை. பாஜக பெற்றுள்ள நன்கொடையானது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தொகையை விட 12 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.589.38 கோடி ஆகும். ஆனால் அதற்கு அடுத்த அதாவது 2017-18-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை 20 சதவீதம் குறைந்துள்ளது. கட்சியை பொறுத்தவரை கடந்த நிதியாண்டை விட 2017-18-ஆம் நிதியாண்டில் பாஜக 18 சதவீதம் குறைவாகவும், காங்கிரஸ் கட்சி 36 சதவீதம் குறைவாகவும் நன்கொடையை பெற்றுள்ளது.

பாஜக பெற்ற நன்கொடை குறைந்திருந்தாலும், மொத்த கட்சிகளின் நன்கொடை மதிப்பில் பாஜகவின் நன்கொடை சதவீதம் தற்போதைய நிதியாண்டில் அதிகரிக்கவே செய்திருக்கிறது. பெருநிறுவனம், வணிகத் துறையில் இருந்து மொத்தமாக 422.04 கோடி தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.400.23 கோடி பாஜகவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.