பசுக்களை விற்பாக இஸ்கான் (ISKCON) அமைப்பு மீது பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, அவர் ரூ.100 கோடி நஷ்டஈடு தரக் கோரி அவ்வமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், ’இன்று நாங்கள் மேனகா காந்தி எம்.பிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எங்களுக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். முன்பு மத்திய அமைச்சராக இருந்த எம்.பி. மேனகா காந்தி, ஒரு மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் எப்படி பொய் சொல்ல முடியும்? மேனகா காந்தியின் அவதூறுப் பேச்சால் உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வீடியோ ஒன்றில் பேசியிருந்த மேனகா காந்தி, “இஸ்கான், நாட்டின் மிகப்பெரிய மோசடி நிறுவனம். கோசாலைகளை (பசுக்களுக்கான இடம்) பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு பலன்களைப் பெறுகிறது. ஆனால் பசுக்களை பராமரிக்காது, அவற்றை இறைச்சி கடைகளுக்கு அனுப்பி வருகிறது.
நான் இஸ்கான் நிறுவனத்தின் ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் கோசாலைக்கு சென்றேன். அங்கு பால் கொடுக்காத பசுக்களையோ, கன்றுகளையோ காண முடியவில்லை. இதன்பொருள் என்னவென்றால், அவை அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. இஸ்கான் தனது அனைத்து மாடுகளையும் இறைச்சி கடைக்காரர்களுக்கு விற்று வருகிறது. இதை அவர்கள் செய்யும் அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை’ என அதில் தெரிவித்திருந்தார்.
இதற்கு இஸ்கான் அமைப்பும் பதில் அளித்திருந்தது. இந்த நிலையில், மேனகா காந்தி ரூ.100 கோடி நஷ்டஈடு தரக் கோரி அவ்வமைப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.