இந்தியா

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை 2 முறை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை 2 முறை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!

Rasus

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை பாஜக எம்எல்ஏ ஒருவர் கடுமையாக தாக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பக்லி தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சம்பலால் தேவ்டா. இவர் உதய்நகர் காவல் நிலையத்திற்குள் புகுந்து அங்குள்ள போலீசார் ஒருவரை கன்னத்தில் இரண்டு முறை அறையும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திற்குள் 2 குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எம்எல்ஏவின் மருமகன் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. அப்போது பணியிலிருந்த காவலர் சந்தோஷ் இவானாட்டி இதுகுறித்து எம்எல்ஏவின் மருமகனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எம்எல்ஏ சம்பலால், காவல் நிலையத்திற்குள் நுழைந்து சம்பந்தப்பட்ட போலீசாரை கன்னத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எம்எல்ஏ சம்பலால், போலீசாரை தாக்கியதாகக் கூறப்படும் செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “எனது மகனும் மருமகனும் சந்தைக்கு சென்றநேரத்தில் திருடன் ஒருவர் அவர்களது பைக்கை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். இவர்கள் இருவரும் தூரத்திச் சென்றபோதும் திருடன் தப்பிவிட்டான். எனவே எனது மகனும், மருமகனும் புகார் கொடுக்க போலீசாரை அணுகிய போது அவர்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இதை அறிந்து நான் காவல்நிலையம் வந்தபோது, காவல்நிலைய அதிகாரிகள் என்னுடைய மகனை அடித்துக் கொண்டிருந்தனர். நான் வந்து தலையிட்டு தான் என் மகனை காப்பாற்றினேன்” என தெரிவித்துள்ளார்.