மத்தியப் பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்திய பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, மதுக்கடை மீது கல் வீசும் காட்சி வெளியாகியுள்ளது.
இக்காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் உமாபாரதியே வெளியிட்டுள்ளார். போபாலின் ஆசாத் நகரில் உள்ள மதுக்கடை மீது உமாபாரதி கல் வீசுகையில் அவரை சூழ்ந்திருந்த பாஜக தொண்டர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்கள் வருவாயை மது குடிப்பதற்கே செலவழித்துவிடுகின்றனர் என்றும் எனவே, அவர்கள் குடும்பம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உமாபாரதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு அண்மையில் மது விலையை 20% குறைத்தது. இந்நிலையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமாபாரதி போராட்டத்தை தொடங்கியுள்ளார். தனது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது அல்ல என்றும் உமாபாரதி விளக்கம் அளித்துள்ளார்.