Kailash Vijayvargiya Facebook
இந்தியா

”மோசமான ஆடை அணியும் பெண்கள் தேவிகள் அல்ல.. சூர்ப்பனகைகள்” - பாஜக பொதுச்செயலாளரின் கருத்தால் சர்ச்சை!

மோசமான ஆடை அணியும் பெண்கள் ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகாவை போன்று இருப்பதாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Justindurai S

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா, அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வெளிநாடுகளில் ஆண் நண்பர்களை பெண்கள் மாற்றிக் கொள்வது போல், நிதிஷ் தன் கூட்டணியை மாற்றுகிறார் என சில மாதங்களுக்கு முன்பு கைலாஷ் விஜய்வர்கியா கருத்து கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை வெளியிட்டு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார் கைலாஷ் விஜய்வர்கியா.

அனுமன் மற்றும் மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய கைலாஷ் விஜய்வர்கியா, "இரவில் வீட்டுக்குக் கிளம்பும் போது, படித்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் போதையில் கிடப்பதைப் பார்க்கிறேன். காரில் இருந்து இறங்கி, போதையை தெளியவைக்க முயற்சி செய்வேன்.

பெண்களை நாம் தெய்வமாகப் பார்க்கிறோம். ஆனால், பெண்கள் அணிந்து திரியும் மோசமான ஆடைகள், அவர்கள் ராமாயணத்தில் வரும் தேவியாக அல்லாமல் சூர்ப்பனகையை போல் தெரிகிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல அழகான உடலைக் கொடுத்திருக்கிறார். ஆடைகள் அணிவதில் கவனம் தேவை நண்பர்களே" என்று பேசியிருக்கிறார்.

பெண்கள் அணியும் உடைகள் குறித்து கைலாஷ் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு பலரும் கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கிறார்கள்.