இந்தியா

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி: திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி: திருமாவளவன் குற்றச்சாட்டு!

sharpana

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் முன்னரே நியமன எம்எல்ஏக்களை அறிவித்தது ஜனநாயக படுகொலை என அவர் விமர்சித்துள்ளார்.

கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சியை திமுக முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல்

புதுச்சேரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 6 தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டின. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து என்.ரங்கசாமி கடந்த ஏழாம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த நிலையில், அம்மாநிலத்துக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தேர்வு செய்யும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்ளது. அதனடிப்படையில், கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்கம் தேர்வு செய்துள்ளது.

இவர்களில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.வெங்கடேசன் கடந்த மார்ச் மாதம் தமது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ இதுவும் ஒரு காரணமாக இருந்தது. வி.பி.ராமலிங்கம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சபாநாயராக இருந்த சிவக்கொழுந்துவின் சகோதரர் ஆவர். சிவக்கொழுந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடாத நிலையில் ராமலிங்கம், லாஸ்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். ஆர்.பி.அசோக் பாபு புதுச்சேரி நகர மாவட்ட பாஜக தலைவராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகின்றார்.

நியமன உறுப்பினர்களுக்கு பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் அதிகாரம் உள்ள நிலையில், கோலப்பள்ளி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற ஸ்ரீனிவாசா அசோக் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். இதனால் சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் தலா 10 உறுப்பினர்கள் என சரிசமமாக உள்ளனர்.

மேலும், கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரசில் இருந்து ஒருவரை கூட நியமன உறுப்பினராக மத்திய அரசு தேர்வு செய்யாதது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.