இந்தியா

உ.பி. பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே. சர்மா

உ.பி. பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே. சர்மா

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்த அரவிந்த் குமார் சர்மா, தற்போது உத்தர பிரதேசத்தின் பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே அரவிந்த் சர்மா, மோடியின் வாரணாசி தொகுதியில் நேரடியாக முகாமிட்டு கொரோனா நிவாரணப் பணிகளை பார்வையிடுவது, மோடி - அமித் ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது என உத்தரப் பிரதேசத்தில் சுழன்று வந்தார். கடைசியாக மத்திய அரசு பணியில் இருந்த இவர், கடந்த ஜனவரியில்தான் பதவியிலிருந்து விலகினார். அதற்கடுத்த 3 நாட்களில் உத்தரப் பிரதேச பாஜக உறுப்பினராக சேர்ந்துகொண்டார். சில நாட்களில் சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆனார்.

பாஜக மத்திய தலைமை அரவிந்த் குமார் சர்மாவை யோகி ஆதித்யநாத்துக்கு மாற்றாக திணிக்க முற்படுகின்றனர் என்றும்,  விரைவில் அவருக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவையில் அமைச்சர் அல்லது அதற்கும் மேலான பதவி கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்திருக்கும் அவர், “என்னை துணை தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு மத்திய, மாநில பாஜக தலைமை அதிகாரிகளுக்கு, நன்றி. நண்பர்களின் உறுதுணையுடன் கட்சியின் மூத்தவர்களின் வழிகாட்டுதலுடன், சமூகத்துக்கும் – இம்மாநிலத்திற்க்கும் – நம் நாட்டுக்கும் சிறந்த முறையில் பங்காற்றுவேன்” எனக்கூறியுள்ளார் அவர்.

மோடி, அமித் ஷாவுக்கு அடுத்தபடியாக பாஜகவின் எதிர்காலம் என பேசப்பட்டு வரும் யோகியின் இடத்துக்குத்தான், அரவிந்த் சர்மா கொண்டுவரப்படுவார் என்ற சலசலசலப்புகளுக்கு, இந்த பதவி அறிவிப்பு கூடுதல் நம்பிக்கை கொடுத்துள்ளது.

இன்னும் சில மாதங்களில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ளதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி இருக்கின்றது உ.பி. அரசியல் களம். அதிக தொகுதிகளை தன்வசம் கொண்டிருக்கும் உ.பி.யின் தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆட்சியமைக்க உதவுமென்பதால், பாஜக கூடுதல் கவனத்துடன் அங்கு செயல்பட்டு வருகிறது.