3 மாநிலங்கள், பாஜக ட்விட்டர்
இந்தியா

3 மாநில முதல்வர் ரேஸ்: புதியவர்களுக்கு வாய்ப்பா? களமிறக்கப்பட்ட பாஜக மேலிடப் பார்வையாளர்கள்!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Prakash J

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன.

இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று (டிச.7) பதவியேற்றுக் கொண்டார்.

ரேவந்த் ரெட்டி

மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று (டிச.8) பதவியேற்றார். எனினும், பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்த மாநிலங்களில், பாஜக வெற்றிபெற்றும் உடனடியாக ஆட்சியமைக்காததை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றும் உடனடியாக முதல்வரைத் தேர்வுசெய்யாமல் இழுபறி நீடித்தநிலையில், பாஜகவும் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மிசோரம்: முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு!

3 மாநிலங்களில் தேர்வுசெய்யப்படும் முதல்வர்கள்!

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிபெற்றும், இதுவரை முதல்வர்களைத் தேர்வுசெய்ய முடியாமல் பாஜக தலைமை தவித்துவருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல்தான் பாஜக தேர்தலைச் சந்தித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியையும் அரசு திட்டங்களையும் முன்னிறுத்தியே பாஜக பரப்புரை மேற்கொண்டது. இதனால்தான் முதல்வரைத் தேர்வுசெய்வதில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும், மேலும் இந்த ரேஸில் கடுமையான போட்டி இருப்பதாகவும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார், அர்ஜுன் முண்டா

மேலிட பார்வையாளர்கள் நியமனம்!

இந்த நிலையில் 3 மாநிலங்களிலும் முதல்வர்களைத் தேர்வு செய்வதற்காக பாஜக தலைமையால் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், ராஜஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தவாடே, சரோஜ் பாண்டே ஆகியோரும், மத்தியப் பிரதேசத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே.லட்சுமணன், ஆஷா லக்ரா ஆகியோரும், சத்தீஸ்கருக்கு மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனோவால், துஷ்யந்த் கவுதம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலத்தில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள் எனவும், பின்னர் கட்சி மேலிடம் முதல்வரை முடிவுசெய்து அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஹரியானா | “அம்மாவே என்னை 4 லட்சத்துக்கு வித்துட்டாங்க”- காப்பாற்றக்கோரி போலீசில் தஞ்சமடைந்த இளம்பெண்

ம.பியில் சிவராஜ் சிங் சவுகான் மாற்றமா?

இந்த முறை புதுமுகங்களுக்கு முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மத்தியப் பிரசேதத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்யலாம் என தெரிகிறது. ஒருவேளை, சவுகானை மாற்றினால், ஓபிசி வகுப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நரசிங்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரஹலாத் சிங் படேல், முதல்வர் பதவிக்கான போட்டியில் 2வது இடத்தில் இருக்கிறார்.

சிவராஜ் சிங் சவுகான்

இந்தப் பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா, கைலாஷ் விஜயவர்கியா, நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். எனினும் முன்னிலையில் சிவராஜ் சிங் சவுகானே இருக்கிறார் எனவும், அவருடைய பங்களிப்பு மத்தியப் பிரதேசத்தில் அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால், மத்தியப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றிபெற்றதற்கான பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் இதுவரை எந்தத் தலைவரும் போர்க்கொடி உயர்த்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்!

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்குப் பதில் யார்?

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவே மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், தன்னை முதல்வராகத் தேர்வுசெய்ய அவர், 68 எம்எல்ஏக்களிடம் பேசி இருப்பதாகவும், இதில் 28 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வசுந்தரா ராஜே சிந்தியா

ராஜஸ்தானில் வசுந்தராவைத் தவிர, தியா குமாரி, ஓம் பிர்லா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், பாபா பாலக்நாத் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பட்டியலின் பரிசீலனையில் உள்ளன. எப்படி மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானின் பங்களிப்பு அதிகமோ, அதேபோல் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பங்களிப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஆகவே, அவரைத் தாண்டி வேறு ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படாது என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படிக்க: “இந்தியாவின் தோல்வி காதலியின் பிரிவை போன்றது” - உலகக்கோப்பை குறித்து பாஃப் டு பிளெசிஸ்!

சத்தீஸ்கரில் ராமன் சிங்கிற்குப் போட்டியாக யார்?

சத்தீஸ்கரிலும் முதல்வர் பதவிக்கான போட்டியில் பலரது பெயர்கள் அடிபடுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் டாக்டர் ராமன் சிங். பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்றவராக உள்ளார். தவிர, சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக நீண்டகாலம் இருந்துள்ளார். இவரைத் தவிர, சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, சரோஜ் பாண்டே, ரேணுகா சிங், ஓ.பி.சௌத்ரி ஆகியோரும் முதல்வர் போட்டியில் உள்ளனர்.

ராமன் சிங்

இருப்பினும், சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங்கிற்கு எதிராக யாரும் களமிறங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால், இவர்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களின் நன்மதிப்புகளைப் பெறுவதுடன், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியைத் தக்கவைக்க முடியும் என நம்புகிறதாம் கட்சி. என்றாலும், டிசம்பர் 10ஆம் தேதிக்குள் 3 மாநிலங்களிலும் முதல்வர்கள் உறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பதவிநீக்கம்: “போரில் மஹுவா வெற்றிபெறுவார்” - ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா பானர்ஜி