இந்தியா

‘ராஜஸ்தான் காங். ஆட்சியை வசுந்தரா ராஜேவே காப்பாற்றினார்’ : வெளியாகும் அதிர்ச்சி தகவல்

‘ராஜஸ்தான் காங். ஆட்சியை வசுந்தரா ராஜேவே காப்பாற்றினார்’ : வெளியாகும் அதிர்ச்சி தகவல்

Veeramani

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற, பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உதவுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹனுமன் பெனிவால்.

“வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களை அழைத்து அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கூறினார். சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகியிருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார் இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முகாமை நாசப்படுத்த வசுந்தரா முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டுகிறார் ஹனுமன் பெனிவால்.

மேலும் இவர் இது தொடர்பாக டீவிட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த டிவீட்டில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார். இதுபற்றி பேசிய ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா “ இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடவேண்டாம். எங்கள் தலைவர்கள் அவருடன் பேசினர். வசுந்தரா ராஜே எங்கள் மதிப்புமிக்க தலைவர்” என்று கூறியுள்ளார்

சச்சின் பைலட் ஏற்படுத்திவரும் சலசலப்புகளால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பங்கள் நடந்துவருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட், அமைச்சர்களாக இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா உட்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.