இந்தியா

குஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு

குஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு

webteam

தொடர் போராட்டத்தை தொடர்ந்து குஜ்ஜார் மக்களுக்கான 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை ராஜஸ்தான் அரசு
சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியது.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம்
ஆண்டிலிருந்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து
கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் ராஜஸ்தான் அரசு வாக்குறுதி அளித்தது.
மேலும் நாடாளுமன்றத்தில் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது. அதனால் மசோதாவை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து
இழுபறியாகவே உள்ளது.

இதைத்தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் கடந்த 8-ம் தேதியில் இருந்து சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை
தொடங்கினர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ரயில்  மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் ரயில் தண்டவாளத்தின் மீது கூடாரங்களை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு
வந்தனர். இதனால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு மாற்று வழியிலும் திருப்பி விடப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான
இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது என குஜ்ஜார் சமூகத்தினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், தொடர் போராட்டத்தை தொடர்ந்து குஜ்ஜார் மக்களுக்கான 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை ராஜஸ்தான்
அரசு சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியது. இந்த மசோதாவை மின்சாரத்துறை அமைச்சர் பி.டி. கல்லா முன்மொழிந்தார்.
குஜ்ஜார் மட்டுமின்றி பஞ்சாராஸ் உள்ளிட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க இந்த புதிய மசோதா வழி வகை செய்கிறது. இதன்
மூலம் ராஜஸ்தானில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு 21 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.