பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் முஃபசில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெதூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள சாகுபடி செய்யப்படாத நிலம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் ஒரு தரப்பினர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனா். அந்த நிலத்திற்கு மற்றொரு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்த விவகாரத்தில்தான் மர்மநபர்கள் சிலா் இரவு நேரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீவைத்துச் சென்றுள்ளனர்.
இதில், 80 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, சப்-டிவிஷன் அதிகாரி அகிலேஷ்குமார், நகர டி.எஸ்.பி. மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!
இதுகுறித்து நவாடா நகர SDPO, "கிராமத்தில் 80 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல் வந்தாலும், 25 வீடுகள்தான் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விவகாரம், நிலப் பிரச்னை தொடர்பாக நடைபெற்றுள்ளது.
அதிகாரிகள் சம்பவ இடத்தில் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் உரிய உதவிகள் கிடைப்பட வேண்டும் என்றும் குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பகுஜன் சமாஜ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரத்தில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். பீகாரில் ஜங்கிள் ராஜ் அதாவது குண்டர்கள் ஆட்சி நடப்பதாக தேஜஸ்வி யாதவி விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த மாஞ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள். அதேபோல், குற்றம்சாட்டு கைதாகியுள்ளவர்கள் பட்டியலினத்தின் மற்றொரு தரப்பான பஸ்வான் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.