இந்தியா

துணி பை 18 ரூபாயா? பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்!

துணி பை 18 ரூபாயா? பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்!

webteam

துணி பைக்கு 18 ரூபாய் வசூலித்த பிக் பஜார் நிறுவனத்துக்கு ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நிறுவனமான பிக் பஜார், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கிளைகளை பரப்பியுள்ளது. இங்கு அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் இங்கு வாடிக்கையாளராக உள்ளனர். 

ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு பல்தேவ் ராஜ் என்பவர், கடந்த மார்ச் 20 ஆம் தேதி பொருட்கள் வாங்கச் சென்றார். வாங்கிவிட்டு சாமான்களை எடுத்துச் செல்வதற்காக, துணி பை ஒன்று வழங்கப்பட்டது. அதற்கு தனியாக 18 ரூபாய் வசூலித்தனர். துணி பைக்கு ரூ.18 வசூலிக்கப்படும் என்று கடைக்குள் எங்கும் குறிப்பிடவில்லை. அதனால் எதிர்ப்பு தெரிவித்தார். ’எங்கும் இதுபற்றிய தகவலை எழுதி வைக்காமல் பணம் வசூலிப்பது நியாயமான வணிக நடைமுறை இல்லை’ என்றும் கூறினார். அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. 

இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வாங்கிய பொருட்களை பல்தேவ், பை இல்லாமல் வெறும் கைகளில் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதனால் பைகளுக்கான செலவுகளை தனியாக வாடிக்கையாளர்கள் மீது பிக்பஜார் நிறுவனம் திணிப்பதை ஏற்க முடியாது என்று தீர்ப்புக் கூறியது. 

பின்னர், நுகர்வோர் சட்ட உதவி மையத்தில் பிக்பஜார் நிறுவனம், பத்தாயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் பல்தேவ் சிங்கிடம் வசூலித்த 18 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் வழக்குச் செலவுகளுக்காக அவருக்கு 1500 ரூபாயை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.