இந்தியா

’ஹேமந்த் கர்கரே’ தியாகி அல்ல - பிரக்யா சிங் தாகூர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

’ஹேமந்த் கர்கரே’ தியாகி அல்ல - பிரக்யா சிங் தாகூர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

JustinDurai
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நான் கைது செய்யப்பட்ட போது, 1975 எமர்ஜென்சி காலத்தைப் போல் உணர்ந்தேன்'' எனக் கூறியுள்ளார் பிரக்யா சிங் தாகூர்.
கடந்த 2008-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 100 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் என தற்போதைய போபால் தொகுதி பாஜக எம்.பி. ஆன சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்தது. இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால், மேலும் பல இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என அந்த வழக்கை விசாரித்த தீவிரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த கர்கரே தெரிவித்தார். இதற்கிடையில் ஹேமந்த் கர்கரே 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்ற சாத்வி பிரக்யா, கடந்த 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அப்போது தேர்தல் பரப்புரை நிகழ்வொன்றில் பேசிய பிரக்யா சிங் தாகூர், "மாலேகான் வழக்கில் என்னைக் கைதுசெய்த ஹேமந்த் கர்கரே மும்பை குண்டுவெடிப்பில் இறந்ததற்குக் காரணம், நான் அவரைச் சபித்ததுதான்" என்றார். பிரக்யாவின் பேச்சு அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் பிரக்யா தாகூருக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து உடனடியாகத் அவர் தனது கருத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார்.
இந்த நிலையில் அவசர நிலை பிரகடனத்தின் (எமெர்ஜென்சி) 46-வது ஆண்டு விழாவையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரக்யா சிங் தாகூர், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரேவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். "மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நான் கைது செய்யப்பட்ட போது, 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தைப் போல் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன், பார்த்தேன், கேட்டேன்.
சிலர் ஹேமந்த் கர்கரேவை ஒரு தியாகி என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையான தேசபக்தர் அவ்வாறு நினைக்கமாட்டார். ஹேமந்த் கர்கரே 8-ம் வகுப்பு பயிலும்போதே ஆசிரியரின் கையை உடைத்தார். போலி ஆதாரங்களைக் கொண்டு என்னை உள்ளே தள்ளினார் ஹேமந்த் கர்கரே. இதுதான் அவரது ஜனநாயகமா?" என்று பிரக்யா சிங் தாகூர் கூறினார்.
பிரக்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலுஜா, “பிரக்யாவின் கருத்தை பாஜக ஆதரிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். அவர் ஒரு தியாகியின் தியாகத்தை கேலி செய்துள்ளார், இதற்கு முன்பு கோட்சேவை ஒரு 'தேச பக்தர்' என்று அழைத்திருந்தார். அவர் மீது பாஜக எப்போது நடவடிக்கை எடுக்கும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் அவர்.