ஆந்திராவில் சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரரிடம் சுமார் 3 லட்சம் ரூபாய் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்திலுள்ள குண்டக்கல் நகரில் 70 வயதான பஷீர் சாஹேப் என்பவர் பல வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட பஷீர், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது உடலைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் பஷீரின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பஷீர் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க அவரின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பஷீரின் பையையும் சோதித்தனர். அதில் அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்த 3 லட்சத்து 22 ஆயிரத்து 670 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூபாய் நோட்டுகளும், சில்லறையுமாக மொத்தம் இந்தத் தொகை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பஷீர் குறித்து கூறிய குண்டக்கல் நகர் வணிகர்கள், பஷீர் வணிகர்களுக்கு அவ்வப்போது சில்லறை மாற்றித்தருவதற்காக உதவி செய்வார். ரூ.500 நோட்டாக கொடுத்தால் வேறு கடைகளுக்குச் சென்று சில்லறை வாங்கி வருவார். இதற்கு சன்மானமாக ரூ.5 அல்லது ரூ.10 பெற்றுக்கொள்வார் என்று தெரிவித்தனர்.