இந்தியா

நிச்சயம் டூ திருமணம் இடைவேளையில் காதலியை கொலை செய்த நபர்- டெல்லியை அதிரவைத்த தாபா கொலை!

நிச்சயம் டூ திருமணம் இடைவேளையில் காதலியை கொலை செய்த நபர்- டெல்லியை அதிரவைத்த தாபா கொலை!

நிவேதா ஜெகராஜா

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை கொலைசெய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார் குற்றவாளி சாஹில் கெஹ்லோட். இவர் காதலியை கொலை செய்யும் முன், தனது நிச்சயதார்த்த பார்ட்டியில் மகிழ்ச்சியாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார் என டெல்லி காவல்துறை அதிர்ச்சி தகவலை தற்போதைய விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஹரியானாவை சேர்ந்த 25 வயதான நிக்கி யாதவ் என்ற பெண், அவரது லிவ்-இன் பார்ட்னர் சாஹில் கெலாட்டால் கொலை செய்யப்பட்டு, உணவமொன்றில் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி 11-ல் கொலை செய்யப்பட்ட அவரை, மூன்று நாட்களுக்கு பிறகு (பிப்ரவரி 14ல்) டெல்லி காவல்துறை சடலமாக மீட்டது. பின் சாஹில் கெலாட்டிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் தந்தை உருக்கமாக தெரிவிருந்தார்.

இதுகுறித்து இறந்த பெண்ணின் தந்தை சுனில் யாதவ், நேற்று (பிப். 15) அளித்த கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும். எனது மகள் இறந்தது நேற்று (பிப். 14) தான் எங்களுக்குத் தெரிந்தது. அவள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு எங்களை கடைசியாக சந்தித்தாள்" என்று கூறியிருந்தார். இதற்கிடையே குற்றவாளியை கைது செய்த காவல்துறை அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அப்போது குற்றவாளிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் கைப்பற்றப்பட்ட கார், உணவகத்தில் உள்ள தடயங்கள் உள்ளிட்டவரை  ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றைத்தொடர்ந்து குற்றவாளியிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.

அதன்கீழ் தெரியவந்தவையென காவல்துறை தெரிவிப்பது:

“நிக்கி யாதவ், சாஹிலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே சாஹிலுக்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்துள்ளனர். இருவரில் யாரை திருமணம் செய்வதென்ற இரட்டை நிலைப்பாட்டில் சாஹிலிடம் இருந்துளார். நிக்கி யாதவ்வும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சாஹிலை தொடர்ந்து நிர்ப்பந்தித்து இருக்கிறார். சுமார் 15 நாட்கள் தன் திருமண ஏற்பாடுகளிலிருந்த சாஹில், பிப்ரவரி 9, அதாவது தன் நிச்சயதார்த்தின் பின் இரவில், நிக்கி யாதவ்வை சந்திக்க சென்று, அன்றிரவு அவருடன் தங்கியுள்ளார். பின் பிப்ரவரி 10-ம் தேதி, ட்ரிப் ஒன்றுக்கு சென்றுவருவோம் எனக்கூறி நிக்கி யாதவ்வை சாஹில் அழைத்துச்சென்றுள்ளார்.

அப்படி இமாச்சல பிரதேசத்துக்கு அவர்கள் செல்ல முடிவெடுத்துள்ளனர். இதற்காக காஷ்மீரி கேட்-ஐ அடைந்தபோது, காரில் வைத்து இருவருக்குள்ளும் மீண்டும் திருமணப்பேச்சு தொடங்கியுள்ளது. இதில் சாஹில், தனது கார்-ஐ அங்கேயே பார்க் செய்துவிட்டு நிச்சயிக்கப்பட்டுள்ள தன் திருமணத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது மீண்டும் மீண்டும் சாஹிலின் திருமணத்தின் மீது நிக்கி அதிருப்தி தெரிவித்ததால், அங்கிருந்த டேட்டா கேபிள் மூலம் நிக்கியின் கழுத்தை நெறித்துள்ளார் சாஹில். பின் நிக்கியின் உடலை எடுத்துக்கொண்டு தனது தாபாவுக்கு (ஹோட்டல்) காரிலேயே சென்றுள்ளார். உடலை ஃப்ரீசரில் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்”

போன்ற விவரங்கள் குற்றவாளியின் வாக்குமூலம் வழியாக தெரியவந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உள்ளூரில் விசாரித்தபோது, பிப்ரவரி 10-க்குப்பிறகு தனது ஊருக்கு சென்ற சாஹில், அங்கு திருமண ஏற்பாடுகளை தொடர்ந்துள்ளார் என்பதும், பின் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தையும் கொண்டாட்ட மனநிலையோடு செய்துகொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. நிச்சயதார்த்தத்தில் அவர் கொண்டாட்டங்களில் இருந்ததும், திருமண புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதைத்தொடர்ந்து சாஹிலிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு வலுசேர்க்க சிசிடிவி ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.