சத்தீஸ்கரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு திடீரென கரடிகள் வந்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் உட்பட நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த திருமண மண்டபத்துக்குள் தாய் கரடி ஒன்று அதன் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தபடி நுழைந்தது.
பின்னர், அங்கிருந்த திருமண மேடையின் மீது ஏறிய கரடி, அங்கும் இங்கும் சிறிது நேரம் அலைந்துக் கொண்டிருந்தது. பிறகு சிறிது நேரத்தில் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறியது. இதனை அங்கிருந்த மண்டப ஊழியர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக கரடி வந்த சமயத்தில், திருமண நிகழ்ச்சி முடிந்திருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என மண்டபத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர். அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து உணவு தேடி கரடிகள் ஊருக்குள் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.