இந்தியா

9 வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்த சிறுவன் மோஷி!

9 வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்த சிறுவன் மோஷி!

webteam

மும்பை தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் மோஷி, 9 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்துள்ளார்.

கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிய தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர ஓட்டல், நாரிமன் வீடு ஆகிய 8 இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மோஷி என்ற 2 வயது குழந்தையின் பெற்றோர்களான ராப்பி கேவ்ரியல் ஹால்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவிகா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது மும்பையை சந்திரா பெஞ்ஜமின் என்ற வீர பெண்மனி மோஷியின் உயிரை காப்பாற்றினர். இதையடுத்து தனது தாத்தா, பாட்டியுடன் இஸ்ரேல் சென்ற மோஷி, அங்கேயே வசித்து வந்தார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, அங்கு மோஷி மற்றும் அவரது தாத்தா, பாட்டியை சந்தித்தார். அத்துடன் அவர்களை இந்தியாவிற்கு வருகை தரவேண்டும் எனவும், அவர்களுக்கான விசா எப்போழுதும் தயார் நிலையில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகை தந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், மோஷியும் அவரது தாத்தா, பாட்டியும் வருகை தந்துள்ளனர். மும்பையில் தான் வசித்த நாரிமன் வீட்டையும், தன்னைக் காப்பாற்றிய பெண்மனியையும் மோஷி நேரில் சந்தித்தார். இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளிப்பதாக மோஷியின் தாத்தா கூறியுள்ளார். அத்துடன் தற்போது மும்பை மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 19ஆம் தேதி மோஷி இஸ்ரேல் திரும்புகிறார்.