உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்திருந்தனர். மேலும், பொதுநல மனுக்கள் பலவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருகிறது.
இதில், துணை வழக்காக 1994ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி 20 இஸ்லாமிய அமைப்புகள் மனுத்தாக்கல் செய்தன. அதாவது, “முஸ்லிம் சமூகத்தினர் நமாஸ் செய்வதற்கு அத்தியாவசியமான இடம் மசூதி இல்லை. நமாஸை எங்கு வேண்டுமென்றாலும் செய்யலாம். நமாஸை திறந்த வெளியில் கூட செய்யலாம்” என்று அந்தத் தீர்ப்பு கூறுகின்றது. ஒட்டுமொத்த வழக்கையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின.
இஸ்லாமிய அமைப்புகள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தனர். 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூஷன் இருவரும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் மனுக்களை தள்ளுபடி செய்தனர். அதாவது, நமாஸ் செய்வதற்கு மசூதி அத்தியாவசியமான இடம் இல்லை என்ற 1994ம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று தெரிவித்தனர். நீதிபதி அப்துல் நஸீர், ‘மசூதி இஸ்லாமின் முக்கியமான அங்கம்’ என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்போது, “அனைத்து மதங்களும், அனைத்து மசூதிகளும், கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் அனைத்தும் சமமானவை. 1994 ஆண்டு தீர்ப்பு அனைத்து மத இடங்களுக்கும் ஒன்றுதான். 1994ம் ஆண்டு தீர்ப்பு நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமானதே தவிர, அது மதம் சம்மந்தமானது அல்ல. ஆதாரங்கள் அடிப்படையில் சிவில் வழக்கு முடிவு செய்யப்பட வேண்டும். 1994ம் ஆண்டு தீர்ப்புக்கும் தற்போதையை வழக்குகளுக்கும் தொடர்பில்லை” என நீதிபதிகள் கூறினர்.
ஒருவேளை அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டால், ஒட்டுமொத்த அயோத்தி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் விசாரணை துரிதமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அயோத்தி மேல்முறையீட்டு வழக்குகள் அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய தலைமை நீதிபதி அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு விசாரணை மேற்கொள்ளும்.