இந்தியா

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? - நாளை தீர்ப்பு

அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா? - நாளை தீர்ப்பு

rajakannan

அயோத்தி விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்து நாளை உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளிக்கவுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்திருந்தனர். மேலும், பொதுநல மனுக்கள் பலவும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய திருப்பமாக 1994ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு ஒன்று விவாதத்திற்கு வந்துள்ளது. அதாவது, “முஸ்லிம் சமூகத்தினர் நமாஸ் செய்வதற்கு அத்தியாவசியமான இடம் மசூதி இல்லை” என்று அந்தத் தீர்ப்பு கூறுகின்றது. 1994ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி 20 இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டன. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதனை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவது குறித்து நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. ஒருவேளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படவில்லை எனில் வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.