இந்தியா

அயோத்தி நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க மத்திய அரசு கோரிக்கை

அயோத்தி நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க மத்திய அரசு கோரிக்கை

Rasus

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளை அவற்றின் உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை பாதுகாப்பு நோக்கங்களுக்காக 199‌‌1-ம் ஆண்டு மத்‌திய அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அந்த 67 ஏக்கர் நிலப் பகுதிகளை அவற்றின் உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தற்போது அனுமதி கோரியுள்ளது.

முன்னதாக இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்திருந்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றியுள்ள நிலத்தின் உரிமை தற்போதைய நிலையிலேயே, அதாவது மத்திய அரசு வசமே இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்நிலத்தை சம்மந்தப்பட்ட அமைப்பிட‌மே ஒப்படைக்க அரசு அனுமதி கேட்டுள்ளது. சர்ச்சை ஏதும் இல்லாத அந்த நிலம் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ராமஜென்ம‌பூமி நியாஸ் டிரஸ்ட் என்ற அமைப்பிற்கு சொந்தமானது‌ என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகி வரும் நிலையிலும், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையிலும் அரசின் இந்தக் கோரிக்கை ‌முக்கியத்துவம் பெறுகிறது. இத‌ற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் உரிய அனுமதியுடன் சர்ச்சையற்ற பகுதியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் நோக்கிலேயே இம்மனுவை அரசு தாக்கல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியதாகவும் அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.