இந்தியா

போலீசார் தடியடி நடத்தியபோது நடந்தது என்ன...? விவரிக்கும் மாணவிகள்.

போலீசார் தடியடி நடத்தியபோது நடந்தது என்ன...? விவரிக்கும் மாணவிகள்.

subramani

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தவே போராட்டம் தீவிரமடைந்தது., 22 வயதான ஆயிஷா ரென்னா, லதீதா ஃபர்சானா மற்றும் ஷஹீன் அப்துல்லா உள்ளிட்ட மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோ வைரல் ஆனது.

கேரளாவைச் சேர்ந்த மாணவிகளான ஆயிஷா மற்றும் லதீதா இருவரும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். தாக்குதல் சம்பவம் குறித்து தற்போது ஆயிஷா ஊடகங்களிடம் பேசி வருகிறார். “கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 5:30 மணியளவில் போலீசார் கல்லூரிக்குள் அதிரடியாக நுழைவதைப் பார்த்த நான் ஓடிச் சென்று சக மாணவர்களை அழைத்தேன். என்னுடன் லதீதா ஷஹீன் உள்ளிட்ட நண்பர்கள் இருந்தார்கள்., நாங்கள் பாதுகாப்புக்காக ஒரு வீட்டின் கார் நிறுத்தத்திற்குள் நுழைந்தோம், அங்கு வந்த போலீசார் முதலில் எங்களை அடிக்க மாட்டோம் எனக் கூறி வெளியே அழைத்தனர்., அதற்குள்ளாகவே ஒரு போலீஸ்காரர், ஷஹீனை வெளியே இழுத்துப் போட்டு தாக்கத் துவங்கினார். நானும் எனது தோழிகளும் என் நண்பனைக் காக்க தடுத்து நின்றோம், அதனால் நாங்களும் தாக்கப்பட்டோம்.” எனக் கூறினார்.

மேலும் ஆயிஷா மற்றும் லதீதா இருவரும் கூறும்போது “நாங்கள் அல்லாவுக்கு மட்டுமே அஞ்சுகிறோம், அரசாங்கத்திற்கு நாங்கள் பயப்படவில்லை...” என்றனர். மேலும் லதீதா பேசும் போது “காஷ்மீர் விவகாரத்தின் போது கூட நாங்கள் நீதித்துறையின் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கை பாபர் மசூதி தீர்ப்பின் போது தகர்ந்துவிட்டது... அடுத்ததாக அவர்கள் முழு இந்தியாவையும் குறிவைப்பார்கள் எனத் தெரியும். அது தான் இப்போது நடக்கிறது.” எனக் கூறினார்.

இவ்விரு பெண்களும் திருமணமானவர்கள்., இதில் ஆயிஷாவின் பெற்றோர் கேரளாவில் ஆசிரியர்களாக பணி செய்கிறார்கள். இதுபற்றி அவரது தந்தை ரஷீத் கூறும் போது “எனது மகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதால் போலீசாரால் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்.” எனக் கூறினார். மேலும் “முஸ்லீம்களின் உரிமைகளை காப்பாற்றுவதற்கான போராட்டம் இது என்பதால் எனது மகள் யாருக்கும் பயப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக ஆயிஷா கூறும் போது “பெண்களே நீங்கள் சமூகத்தில் ஏதேனும் அநீதியைக் கண்டால் பெண் என்று நினைத்து முடங்கிப் போகாமல் துணிச்சலாக குரல் எழுப்புங்கள். உங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.