இந்தியா

ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் யார்? பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் யார்? பி.சி.சி.ஐ அறிவிப்பு

kaleelrahman

ஆஸ்திரேலியா அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு பதிலாக தமிழக இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியின் சார்பாக முதன் முறையாக களம் கண்டார். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரை இழந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இந்திய அணி டி-20 போட்டிகளில் விளையாடியது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. டி-20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முக்கிய காரணமாக இருந்தார். இவர் முதல் போட்டியில் 3 விக்கெட்களையும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்களையும். மூன்றாவது போட்டியில் 1 விக்கெட்டையும் வீழ்த்தி, இந்திய அணி டி-20 தொடரை வெல்லவும் காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அடிலாய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 18 பேர் கொண்டு பட்டியலை பி.சி.சி.ஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, ஹனும விஹாரி, விர்திமான் ஷஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுமேஷ் யாதவ், முகமது ஷமி, மற்றும் பும்ரா ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர சுப்மன் கில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 18பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.