வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் சகோதரிக்கு சக ராணுவ வீரர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது
இந்திய ராணுவத்தின் விமானப்படையைச் சேர்ந்த வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா. இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையின் போது வீரமரணம் அடைந்தார். ஜோதி பிரகாஷுக்கு மூன்று சகோதரிகள். இரண்டு சகோதரிகளுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவது சகோதரியான சசிகலாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ஜோதி பிரகாஷின் தந்தை, தனது மூன்றாவது மகளின் திருமண பத்திரிகையை ஜோதி பிரகாஷின் நண்பர்களுக்கும் மரியாதை நிமித்தமாக அனுப்பி வைத்துள்ளார்.
திருமண பத்திரிகையை பெற்றுக்கொண்ட ராணுவ வீரர்கள் 50 பேர் சசிகலாவின் திருமணத்துக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே வந்துள்ளனர். திருமண வேலைகளை எல்லாம் பொறுப்பாக இருந்து கவனித்த அவர்கள், நண்பனின் தந்தையிடம் ரூ.5 லட்சத்தையும் கொடுத்து திருமணத்துக்கு உதவி செய்துள்ளனர். ஒரு சகோதரர் நாட்டுக்காக உயிர் விட்டாலும் பல சகோதரர்கள் தனக்கு கிடைத்திருப்பதாக சசிகலா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஜோதி பிரகாஷின் தந்தை, ''நான் ஒரு மகனை இழந்தேன். ஆனால் இன்று எனக்கு 50 மகன்கள் கிடைத்திருக்கிறார்கள். 'நீங்கள் தனியாக இல்லை நாங்கள் இருக்கிறோம்' என்று எனது மகன்கள் கூறுகிறார்கள். இன்று எனக்கு துணையாக நாடே உள்ளது’’ என்று தெரிவித்தார்.
50 ராணுவ வீரர்கள் சேர்ந்து சக நண்பரின் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்த அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.