இந்தியா

“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி

“காங்கிரஸ் பெற்றது வஞ்சக வெற்றி” - உ.பி முதலமைச்சர் யோகி

webteam

காங்கிரஸ் பெற்றிருப்பது வஞ்சக வெற்றி என்றும், இது நீடிக்காது என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று இடங்களையுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மற்ற இரண்டு இடங்களிலும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் கூட்டணி எதிர்க்கட்சிகள் இது மக்களவைத் தேர்தலின் முன்மாதிரி, இதே நிலை மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ் பொய்களை கூறி வெற்றி பெற்றுள்ளது. அது விரைவில் வெளிப்படும். அதனால் வரும் கால தேர்தல்களில் நாங்கள் எளிதாக வெற்றி பெற முடியும். அத்துடன் காங்கிரஸ் இந்த வெற்றியை வஞ்சகத்தின் மூலம் பெற்றுள்ளது. வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டு ஜனநாயகத்தில் இருக்கும் அதை நாம் பணிவுடன் ஏற்க வேண்டும் நாங்கள் வெற்றியின் போதும் ஆடுவதில்லை. தோல்வியின் போது ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதும் இல்லை. ஆனால் காங்கிரஸினர் இரட்டை வேடம் போடுகின்றனர். தோற்றால் ஓட்டு இயந்திரங்களை குறைகூறும் அவர்கள், வெற்றி பெற்றால் அதே இயந்திரங்களை வழிபடுகின்றனர்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கடவுள் அனுமானின் சமூகம் குறித்து யோகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் மாவீரர் அனுமனின் சமூகம் குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. அதேசமயம் அனுமன் ஆன்மிகத்தில் வாழ்கிறார் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதேசமயம் அனுமன் ஆன்மீகத்தை பாகுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்குகிறார்” எனக் கூறினார். நேபாளில் நடைபெற்று ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் இந்தியா திரும்பிய யோகி, பாட்னா விமான நிலையத்தில் இந்தப் பேட்டியை அளித்தார்.