இந்தியா

மேகாலயா, நாகலாந்தில் தொடங்கியது வாக்குப்பதிவு! போட்டியின்றி தேர்வான வேட்பாளர்! யார் அவர்?

மேகாலயா, நாகலாந்தில் தொடங்கியது வாக்குப்பதிவு! போட்டியின்றி தேர்வான வேட்பாளர்! யார் அவர்?

Sinekadhara

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலா 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்களிலும், இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேகாலயாவில் 3 ஆயிரத்து 482 வாக்குச் சாவடிகளும், நாகாலாந்தில் 2 ஆயிரத்து 351 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, இரு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஆயிரத்து 200க்கும் அதிகமான மத்தியப் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளார் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதால், அங்கு தற்போது 59 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அகுலுடோ தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் என். கேகஷே சுமி என்பவரும், பாஜக சார்பில் கஜெடோ கினிமி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் காங்கிரஸ் சார்பில் வேட்புமனுதாக்கல் செய்த கேகஷே வாப்ஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதேபோல் 60 தொகுதிகளைக்கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் அங்கும் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

தவிர, மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதிக்கும், ஜார்க்கண்டின் ராம்கர் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.