இந்தியா

வீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்

வீட்டிற்குள் புகுந்த சிங்கத்திடம் இருந்து தப்பிய 15 பேர் - அதிர்ச்சி சம்பவம்

webteam

குஜராத் மாநிலத்தில் விவசாயி வீட்டில் புகுந்த ஆசிய சிங்கம் ஒன்று அங்கிருந்த கன்றுகுட்டியை அடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டம் பாட்லா கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினர் 15 பேர் மற்றும் 20 எருமை மாடுகளுடன் வசித்து வருகிறார். 

அப்பகுதிக்கு அருகே உள்ள கிர் காட்டுப்பகுதியில் உள்ள சிங்கங்கள் அடிக்கடி தப்பி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் விவசாயி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எருமை மாடு கன்றுகுட்டி அலறும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் உஷாராகினர். 

சிங்கம் வந்ததையறிந்த அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்புறம் தாள் போட்டுக்கொண்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சிங்கம் வீட்டில் கொட்டி வைத்திருந்த நிலக்கடலைகளின் மீது தஞ்சம் அடைந்திருந்ததை கண்ட விவசாயி அந்த அறையை விட்டு வெளியே வந்து பூட்டிக்கொண்டார். மேலும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். 

தகவலறிந்து வந்த வனத்துறையினர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிங்கத்தை மீட்க முயன்றனர். ஆனால் வனத்துறையினர் சிங்கத்தை மீட்பதற்குள் அது வேறு பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றது. 

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “பின்புற கதவை உடைக்கும்போது சிங்கம் மற்ற வீடுகளுக்குள் செல்லாமல் இருக்க சங்கிலிகள் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கதவை உடைத்து செல்வதற்குள் சிங்கம் வேறு இடத்திற்கு சென்று விட்டது.” என தெரிவித்தார்.