இந்தியா

‘நான் உயிருடன்தான் இருக்கிறேன்’ - தொலைபேசியில் பேசிய இந்திய ராணுவ வீரர்

‘நான் உயிருடன்தான் இருக்கிறேன்’ - தொலைபேசியில் பேசிய இந்திய ராணுவ வீரர்

webteam

நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று சீன தாக்குதலில் இறந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ வீரர் தொலைபேசியில் பேசிய சம்பவம் அவரது ஊர் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிழக்கு லடாக்கில் இருந்த இந்திய ராணுவத்தினர் பலர்ர் பீகார் ரெஜிமென்ட்டில் பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகிறது. எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து சீன ராணுவத்தின் அத்து மீறிய தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவில் வகையில் இந்தியாவில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டி பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீன ராணுவத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் அவரது வீட்டிற்கு தொலைபேசியில், தான் உயிருடன் இருப்பதாகக் கூறிய சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பார்சா தொகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில் குமாட். இவட்தான் குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி மூலம் அந்தத் தகவலை கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த தாக்குதலில் இவர் இறந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால், வேறு சிப்பாய்க்கு பதிலாக இவரது பெயர் தவறாக இடம்பெற்றுவிட்டதாக தெரிகிறது. ஆகவே இவர் உயிர்த்தியாகம் செய்துவிட்டதாக தவறான செய்தி வெளியாகிவிட்டது. இது தொடர்பான செய்தியை ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை சுனிலின் இராணுவப் பிரிவு, அவரது சகோதரர் அனிலுக்குத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த புதன்கிழமை பிற்பகல் சுனிலின் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. ஆயினும், மறுநாள் காலையில் சுனிலின் குரலைக் கேட்கும் வரை தங்களது அன்புக்குரியரை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில்தான் அவரது குடும்பம் இருந்துள்ளது.

சுனிலின் மனைவி மேனகா இராணுவப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பு வந்ததும் கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்துள்ளார். தொலைபேசியில் அவரது கணவரின் குரலை கேட்ட பிறகே நிம்மதி அடைந்ததாக அவர் கூறியுள்ளார். "ரோஷினியின் தந்தையின் குரல் மறுபுறம் பேசியது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார்.