கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் அனைவருக்காகவும் பாடுபடுவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், பதவியேற்றுக் கொண்டார். தொடர்ச்சியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர், கெஜ்ரிவாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தவிர 6 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்புக்கு பின்னர் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியின் மகன், முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும், நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு அங்கம். கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் அனைவருக்காகவும் பாடுபடுவேன். இது என்னுடைய வெற்றி இல்லை. இது டெல்லி மக்களுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு தாய்க்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த வெற்றி.
டெல்லி மாணவர்களிடம் கல்விக்கு கட்டணம் வசூலிக்க முடியாது. டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. கெஜ்ரிவாலை டெல்லி நேசிக்கிறது. நான் டெல்லியை நேசிக்கிறேன். இந்த அன்பு இலவசம். மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்க வேண்டுமா? நான் அவ்வாறு செய்தால் அது அவமானமாக இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிவாரணத்தையும் கொண்டுவர நாங்கள் கடுமையாக முயற்சித்து வருகிறோம். டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.