கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஆங்காங்கே உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே பாம்பு, தவளை போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு மக்கள் ஆளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அருணாச்சலப் பிரதேசத்தில், 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வேட்டையாடி, துண்டு துண்டாக வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தை துண்டு துண்டாக வெட்டி, வாழை இலையில் வைத்து அவர்கள் சுத்தம் செய்யும் காட்சி அதில் உள்ளது. தடபுடலாக பாம்புக்கறி விருந்து படைத்திருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
ஊரடங்கால் அசைவம் கிடைக்கவில்லை. எங்களுக்கு சாப்பிட ஆசையாக உள்ளது. அதனால் காட்டுக்குள் போனோம். அரசாங்க அதிகாரிகள் தயவுசெய்து கோபப்பட வேண்டாம், நாங்கள் இதை வழக்கமாக செய்ய மாட்டோம் என அந்த வீடியோவில் ஒருவர் பேசுகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் தப்பியோடிவிட்டதால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தெரிவித்துள்ள அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், காட்டு விலங்குகளை வேட்டையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் காட்டு விலங்குகளின் பாதுகாப்பை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.