இந்தியா

கார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

webteam

கார் பந்தயம் நடந்தபோது, உள்ளே பைக் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் காயமடைந்தார். 

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில், இந்திய தேசிய ரேலி (INRC) என்ற பெயரில் 6 சுற்றுகளாக கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இதில், முதல் 2 சுற்று சென்னை மற்றும் கோவையில் நடந்தது. மூன்றாவது சுற்றுப் போட்டி ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்று நடந்தது. இந்த பந்தயம் இன்றும் தொடர்வதாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் 6 முறை சாம்பியனான கவுரவ் கில் பங்கேற்றார். 145 கிலோ மீட்டர் வேகத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தது. எல்லையை அடைவதற்கு 200 மீட்டர் தூரத்துக்கு முன், பந்தயம் நடக்கும் சாலைக்குள் ஒரு பைக், சிக்னலை மீறி வந்துவிட்டது. 

கார் வேகமாக வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த அந்த பகுதியைச் சேர்ந்த நரேந்திரா, அவர் மனைவி புஷ்பா, அவர் மகன் ஜிதேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அங்கேயே உயிரிழந்தனர். காரும் விபத்தில் சிக்கியதால், அதை ஓட்டிய கவுரவ் கில்-லும் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக பந்தயம் பாதியில் கைவிடப்பட்டது.

(கவுரவ் கில்)

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளன தலைவர் பிருத்விராஜ் கூறும்போது, ‘கார் பந்தயம் காரணமாக இந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தோம். பைக்கில் வந்த நரேந்திரா, பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்கள் அறிவுரையை மீறி, தடுப்பை உடைத்துக் கொண்டு, பந்தய பாதைக்குள் நுழைந்தார். இதனால் விபத்து நடந்துவிட்டது. கவுரவ் கில் காரை நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை’ என்றார்.

முன்னணி கார் பந்தய வீரரான கவுரவ் கில், சமீபத்தில்தான் மத்திய அரசின் அர்ஜூனா விருதை பெற்றார். இந்த விருது பெற்ற முதல் கார்பந்தய வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.