இந்தியா

‘நம் அமைதியை அட்வான்ஸா எடுத்துக்கிறாங்க’. Boycott-க்கு எதிராக கொந்தளித்த அர்ஜூன் கபூர்!

‘நம் அமைதியை அட்வான்ஸா எடுத்துக்கிறாங்க’. Boycott-க்கு எதிராக கொந்தளித்த அர்ஜூன் கபூர்!

ச. முத்துகிருஷ்ணன்

பாலிவுட் படங்களை புறக்கணிப்போம் என்ற கோஷங்களுக்கு எதிராக நடிகர் அர்ஜூன் கபூர், “நாங்கள் முதலில் இந்த கோஷங்களை மிகவும் பொறுத்துக் கொண்டோம். தற்போது அதை அட்வான்ஸாக கருதி புறக்கணிப்பை வாடிக்கையாக்கி விட்டனர்” என்று பேசியுள்ளார்.

சமீப காலமாக பாலிவுட் படங்கள் திரையரங்குகளில் வெளியானதும், அதை புறக்கணிக்குமாறு “Boycott” கோஷங்கள் எழுப்பப்பட்டு ட்ரெண்ட் ஆவதும், சில நாட்களில் அந்த படங்கள் படுதோல்வி என பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டன. இந்த புறக்கணிப்பு முழக்கங்கள் சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா, அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் ஆகிய படங்களுக்கு மட்டுமல்லாது இன்னும் திரைக்கு வராத ஹிருத்தின் ரோஷனின் விக்ரம் வேதா படத்தை குறிவைத்து எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் இந்த புறக்கணிப்பு போக்கு குறித்து பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தனது காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “நாங்கள் இந்த புறக்கணிப்பு கோஷங்களைப் பற்றி அமைதியாக இருந்து தவறு செய்தோம் என்று நினைக்கிறேன். அது எங்கள் கண்ணியம். ஆனால் மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர். எங்கள் வேலை நமக்காகப் பேசும் என்று நினைத்து நாங்கள் தவறு செய்தோம். நாங்கள் அதை மிகவும் பொறுத்துக்கொண்டோம், இப்போது மக்கள் இந்த புறக்கணிப்பை ஒரு பழக்கமாக மாற்றியுள்ளனர்.

நாம் ஒன்று கூடி அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். ஏனென்றால் நம்மைப் பற்றி எழுதும் விஷயங்கள் அல்லது ஹேஷ்டேக்குகள் உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. இந்த புறக்கணிப்பு கலாச்சாரம் நியாயமற்றது. முன்பு புதிய படங்கள் வெளியாகும்போது பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். வெள்ளிக்கிழமை காலை மக்களிடையே புதிய படத்திற்கான உற்சாகம் மக்களிடையே இல்லை. ஆனால் இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் மிகவும் மோசமாக உள்ளன. நம் தொழிலின் பிரகாசம் குறைந்து வருகிறது.

மக்கள் பல ஆண்டுகளாக நம் மீது சேற்றை வீசுகிறார்கள். ஒரு புதிய கார் கூட சேறும் சகதியுமாக மாறும். அதன் பிரகாசத்தை இழக்கும். அதை நாங்கள் எதிர்கொள்கிறோம். மக்களின் பார்வை மாறும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கு தொழில்ரீதியாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.