ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டனர். தற்போது அங்குள்ள விழியநகரம் மாவட்டத்தில் 27 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.
சனிக்கிழமையன்று கந்த்யாடா மண்டலைச் சேர்ந்த ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கும், டாட்டிராஜூரு மண்டல் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கோப்புப் படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கில், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஆசிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து விழியநகரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை ஒரு வாரம் மூடுமாறு மாவட்ட கல்வி அதிகாரி நாகமணி உத்தரவிட்டுள்ளார். நிலைமை சீரடைந்ததும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.