இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா தனது லிவ்-இன் பார்ட்டனரால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகளே ஓய்ந்திடாத நிலையில், டெல்லியை சுற்றிய பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து கொலை குற்றம் குறித்த செய்திகளே நாடு முழுவதும் பரவி வருகிறது.
அந்த வகையில், கணவனை மகனின் உதவியோடு மனைவி கொலை செய்ததோடு, சடலத்தை 22 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வீட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக வீசிய சம்பவம் அம்பலமாகியிருக்கிறது.
கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகரைச் சேர்ந்த அஞ்சன் தாஸ் அவரது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக்கால் கொல்லப்பட்டு துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்டிருக்கிறார். வெட்டி வீசப்பட்ட அஞ்சன் தாஸின் உடல் பாகங்களை வைத்து போலீசாருக்கு சம்பவம் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து கொலைக்கான காரணமாக அஞ்சன் தாஸுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை அறிந்ததால் பூனமும் அவரது மகன் தீபக்கும் சேர்ந்து கொலையை கடந்த ஜூன் மாதம் அரங்கேற்றியிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, சம்பவம் நடந்த பூனம் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமிராக்களை போலீசார் ஆராய்ந்திருக்கிறார். அதில், தீபக் தினந்தோறும் இரவு நேரத்தில் கையில் பையுடன் நடந்து செல்வதும், அவரைத் தொடர்ந்து தாய் பூனமும் பின்னாலேயே செல்வதும் பதிவாகியிருக்கிறது.
இதனையடுத்து, பூனம் மற்றும் தீபக் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், அஞ்சன் தாஸ் இருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், தாஸும், பூனமும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கமாக இருக்கும் என்றிருக்கிறார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அதே வீட்டில் தாஸ் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும், கடந்த ஆறேழு மாதங்களாக அஞ்சன் தாஸை காணவில்லை என கேட்டபோது அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக பூனம் கூறியதாகவும் அண்டை வீட்டார் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் தாஸை வெட்டிக் கொன்று அவரது உடலை 22 துண்டுகளாக வெட்டி, வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்து, தினசரி இரவானதும் பாண்டவ் நகர் பகுதிக்கு சென்று அப்புறப்படுத்துவதையே பூனமும் தீபக்கும் வேலையாக செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து பூனம் மற்றும் தீபக்கை கொலை, ஆதாரத்தை மறைத்தல், பொய்யான தகவல்களை வழங்குதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டதோடு, கொல்லப்பட்ட அஞ்சன் தாஸின் உடல் பாகங்கள் சிலவற்றையும் பாண்டவ் அகர் போலீசார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.