ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படத்தை நீக்குவது குறித்து தான் வெளியிட்ட கருத்தை திரும்பப் பெறுவதாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
தனது கருத்து பலரது மனதை புண்படுத்த வாய்ப்புள்ளதால் அதை திரும்பப் பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் காந்தி குறித்து தான் தெரிவித்த கருத்து தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். காதி துறை அண்மையில் வெளியிட்ட காலண்டரில் காந்தி நூற்கும் படத்திற்கு பதிலாக மோடி நூற்கும் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அனில் விஜ், காதி காலண்டரை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் படம் அகற்றப்படும் என தெரிவித்திருந்தார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சுக்கு அத்தரப்பிலிருந்தே எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.