இந்தியாவின் அமுல் நிறுவன ஊழியர்கள் கடந்த 8 ஆம் தேதி இலங்கையின் விவசாய நிலங்களை ஆய்வு செய்யும் பணியை முன்னெடுத்துள்ளதாக தேசிய (இலங்கையின்) பண்ணை விலங்குகள் மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசிய பண்ணை விலங்குகள் மேம்பாட்டு சபையின் கீழ் 31 விவசாய நிலப்பகுதிகள் காணப்படுகிறது. அவை மொத்தம் 28,000 ஏக்கர்களை கொண்டதாகும்.
இந்த விவசாய நிலங்களை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்னதாக அவை மதிப்பீடு செய்யப்படுகிறது. இப்பணிகள் 80% முடிந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் தேசிய பண்ணை விலங்குகள் மேம்பாட்டுச்சபைக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, “இந்தியாவில் இருந்து பால் இறக்குமதி இலங்கைக்கு செய்யப்படவில்லை. 15,000 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இலங்கையில் அமுல் முதலீடு செய்யப்போகிறது. ஆனால் இவற்றால் ஐலேண்ட், மில்கோ நிறுவனங்களின் பணிகள் மாற்றப்படாது. இலங்கை பால் உற்பத்தி நிறுவன ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு கால்நடை பண்ணைகளை குத்தகைக்கு விடும் முயற்சிக்கு இலங்கையின் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.